உம்மு ஸலமா (ரலி) : أم سلمة
அன்னையவர்களின் இயற்பெயர் ஹிந்த் பின்த் உமைய்யா என்றிருந்த போதும், உம்மு ஸலமா (ரலி) என்றே மிகப் புகழோடு அழைக்கப்பட்டு வந்தார்கள். அன்னையவர்களின் முதற் கணவரின் பெயர், அபூ ஸலமா என்றழைக்கப்படக் கூடிய அப்துல்லா பின் அப்துல் அஸத் மக்சூமி (ரலி) என்பவராவார். இஸ்லாத்தினைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்ப கால முஸ்லிம்களின் பட்டியலில் அபூ ஸலமா அவர்களும் இடம் பிடித்த, சிறப்புக்குரியவர்களாவார்கள். அந்த கால கட்டத்தில் இஸ்லாத்தினைத் தழுவிய 11 நபர்களில் இவரும் ஒருவர். இன்னும் இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பால் குடிச் சகோதரரும் ஆவார்.
உம்மு ஸலமா (ரலி) அவர்களும் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராவார். இவரது தாயார் பெயர் அதீகா பின்த் ஆமர் பின் ரபீஆ பின் மாலிக் பின் கஸீமா ஆகும். மக்கத்துக் காபிர்களின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் தனது கணவருடன் ஹபஷா (எத்யோப்பியா)விற்கு முதற்குழுவாக ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள்.
பின்னர் மக்காவிற்குத் திரும்பி மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்யமுற்பட்டார்கள். அப்போது முகவும் துன்புறுத்தப்பட்டார்கள். அபூ ஸலமா, உம்மு ஸலமா, குழந்தைகள் மூன்று பேரும் மூன்று திசையில் பிரக்கப்பட்டார்கள். அந்த சோக வரலாறு மிக நீண்டது. விரிவஞ்சி இங்கு கூறவில்லை.
மதீனாவில் உஹதுப் போரில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஹிஜ்ரி 4ம் ஆண்டு அபூஸலமா (ரலி) அவர்கள் மரணமடைந்தார்கள். இறக்கும் போது பின்வரும் பிரார்த்தனையைச் செய்தார்கள் : இறைவா! என்னைப் போலவே என்னுடைய குடும்பத்தை பாதுகாத்துக் கவனித்துக் கொள்கின்ற ஒருவரை, துணைவராக ஆக்கி வைப்பாயாக!. இன்னும் உம்மு ஸலமா (ரலி) அவர்களுக்கு கவலையையும், கடினமான வாழ்வையும் தராத ஒருவரை அவருக்கு துணைவராக ஆக்கி வைப்பாயாக..! என்று தனது மனைவிக்காகப் பிரார்த்தித்தார்கள்.
தான் வயதானபெண் என்பதாலும் பிள்ளைகள் அதிகமிருப்பதாலும் அபூ பக்ர் (ரல), அதற்குப் பின் உமர் (ரலி) ஆகியோர் அவர்களை மணமுடிக்க விரும்பியும் மறுத்தார்கள். இறுதியாக மறுமணம் செய்வதில் உள்ள நியாயங்களை நபியவர்கள் உம்மு ஸலமாவிற்கு எடுத்துக்கூறி பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்ப்பதாகவும் வாக்களித்து நபியவர்களே திருமணம் செய்துகொண்டார்கள். அதன் மூலம் அபூ ஸலமா (ரல) கேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிட்டான். இது ஹிஜ்ரி 4ல் இடம்பெற்றது. அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அழகு, கல்வி மற்றும் ஞானத்தின் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் சிறந்த இடத்தினை வகித்தார்கள். ஹுதைபியா உடன்படிக்கையின் போது நபியவர்களுக்கு இவர்கள் வழங்கிய ஆலோசனை இங்கு குறிப்பிடத்தக்கது. அன்னையவர்கள் தனது 84 ஆம் வயதில் ஹிஜ்ரி 62 ஆம் ஆண்டு மரணமடைந்தார்கள். நபியவர்களின் மனைவியரில் இறுதியாக மரணித்தவர் இவர்கள் தான். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.